“முருகன் கோயிலில் தான் ஜோசப் விஜய் என பெயர் வைத்தோம்” - பரபரப்பை கிளப்பும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.
நடிகர் விஜய்க்கு வடபழனி முருகன் கோயிலில் தான் பெயர் வைத்தேன் என இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கும், விஜய்க்கும் நடுவிலான தந்தை - மகன் உறவில் மிகப்பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளதாக சமீபத்திய பட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே ஜோசப் விஜய் எனும் பெயர் வடபழனி முருகன் கோயிலில் வைக்கப்பட்டதாகவும், அதற்கு என்ன காரணம் என்பதற்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், சின்ன வயசுல ஆம்பள பசங்களுக்கு அவங்க அப்பா தான் ஹீரோவா தெரிவாங்க.. ஆனால், வயதுக்கு வந்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் அப்பா வில்லனாக மாறிடுவார். அதுவும் பெரிய புகழ், உச்சம் எல்லாம் அடைந்ததும் அப்பா சொல்வதை கேட்க முடியாத நிலைக்கு சென்று விடுவார்கள் விஜய்யும் அந்த இடத்தில் தான் உள்ளார் என எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.
என் மகன் கருவில் இருக்கும் போதே அவருக்கு விஜய் என்ற பெயரை நான் சூட்டிவிட்டேன் எனக் கூறிய எஸ்.ஏ. சந்திரசேகர், அமிதாப் பச்சனின் படங்களில் எல்லாம் அவருடைய பெயர் விஜய் என்றே வரும், விஜய் என்றால் வெற்றி என் மகனுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று தான் அந்த பெயரை வைத்தேன்.வடபழனியில் உள்ள சாலி கிராமத்தில் தான் விஜய் பிறந்து வளர்ந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், வட பழனி முருகன் கோயிலில் தான் விஜய்க்கு பெயர் சூட்டப்பட்டது.
ஷோபா சந்திரசேகரின் அப்பாவான விஜய்யின் தாத்தா, விஜயவேல் எனும் பெயரை தான் அவருக்கு வைக்க வேண்டும் என விரும்பினார். அவர் விருப்பப்படி விஜயவேல் எனும் பெயரையும் வைத்தோம்.
அதேபோல் எனது அம்மா ஜோசப் விஜய் என பெயர் வைக்க ஆசைப்பட்ட நிலையில் தான் என் மகனுக்கு ஜோசப் விஜய் என வடபழனி முருகன் கோயிலில் பெயர் வைத்தேன் என்றும், மத நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் பெரியவர்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காகவே அந்த பெயர் வைக்கப்பட்டதாகவும், எனக்கு எப்பவும் என் மகன் விஜய் மட்டும் தான் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
என்னை போலவே என் மகன் விஜய்யும் ஜாதி மற்றும் மதங்களை கடந்தவராகத் தான் இருந்து வருகிறார் அவர் அனைவருக்கும் பொதுவானவர். எங்களுக்குள் இருக்கும் இந்த மனக்கசப்பு ரொம்ப சிறியது என்றும் அது சீக்கிரமே சரியாகி விடும் என்றும் மீண்டும் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு ஒன்றாக இருப்போம் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.