சென்னை மெரினா விமான சாகச நிகழ்வு - கலந்து கொள்வது எப்படி?
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்வு இன்று நடைபெற உள்ளது.
விமான படை சாகசம்
இந்திய விமானப்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 92-வது இந்திய விமானப்படை தினத்தையொட்டி, அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 மணிமுதல் மதியம் 1:30 மணி வரை பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
இந்த விமான சாகச நிகழ்வுகளை பொதுமக்கள் இலவசமாகவே கண்டுகளிக்கலாம். நேரில் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்புகிறது.
முதல்வர் வருகை
இதில் இந்திய விமானப்படையின் இந்த விமானப்படை சாகச நிகழ்வில், ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர் அணி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள் என மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபட உள்ளன.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட உள்ளனர்.
இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகைகள் கடந்த ஒரு வாரமாகவே நடைபெற்று வருகிறது. இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகன நிறுத்தம்
பொதுப்பேருந்தை பயன்படுத்தும் மக்களுக்காக கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தனியார் வாகனங்களில் வருபவர்களுக்கு 22 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்த இடங்கள் 9;30 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிஐபி, விஐபிக்கள் ஆகியோரின் வாகனங்கள் மட்டும் காமராஜர் சாலை - கடற்கரை சாலையில் நிறுத்தப்படும். நீல வண்ண பாஸ் உள்ளவர்கள் மட்டும் மாநில கல்லூரி, சுவாமி சிவானந்தா சாலை, லேடி வெலிங்க்டன் கல்லூரி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.
மற்றவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த பின்வரும் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை, சாந்தோம் சாலை - சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப்பள்ளி, மைதானம், புனித சாந்தோம் பள்ளி, கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சாந்தோம் சமுதாய கூடம், லூப் சாலை,
ஆர்.கே.சாலை - லைட் ஹவுஸ் பறக்கும் ரெயில் நிலைய சாலை, என்.கே.டி. பள்ளி, ராணி மேரி கல்லூரி, புனித எபாஸ் பள்ளி, வாலாஜா சாலை - கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம்,
அண்ணாசாலை - தீவுத்திடல் மைதானம், பொதுப்பணித்துறை மைதானம், மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரெயில் நிலைய வளாகம்.