Fish Egg Curry: மீன் முட்டை கிரேவி செய்து சாப்பிடுங்க
சத்துக்கள் நிறைந்த மீன் முட்டையில் குழந்தைகளுக்கு பிடித்தமான கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மீன் முட்டை
பொதுவாக மீன் வாங்கினால் அதிலுள்ள முட்டையினை நம்மில் பெரும்பாலான நபர்கள் சமைப்பதில்லை. வேண்டாம் என்று தூக்கி போட்டுவிடுகின்றனர்.
ஆனால் மீன் முட்டையில் அதிகமான சத்துக்கள் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்து, கண்பார்வை திறனை அதிகரிக்கும் உணவாக மீன் முட்டை இருக்கின்றது.
தற்போது வேண்டாம் என்று ஒதுக்கும் மீன் முட்டையில் குழந்தைகளுக்கு பிடித்தமான கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மீன் முட்டை
சின்ன வெங்காயம் - அரை கப்
பூண்டு - 10 பல்
குழம்பு மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கரம் மசாலா - அரை ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு

செய்முறை
இட்லி பாத்திரத்தில் மீன் முட்டையை வைத்து அரைமணி நேரம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த மீன் முட்டையின் தோலை நீக்கி ஆற வைக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டு இவற்றினை உரலில் தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், இடித்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு வேக வைத்துள்ள மீனை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
கடைசியாக மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் பிரட்டி வேக வைத்து இறக்கினால் மீன் முட்டை கிரேவி தயார்.
