உங்களிடம் கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? அவற்றை எப்படி மாற்றுவது? முழு விவரங்கள்!
உங்கள் கையில் கிழிந்த, எரிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? அவற்றை மாற்ற முடியுமா? எப்படி மாற்றுவது? இந்த கேள்விகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி இந்த கட்டுரை விரிவான பதிலை கொண்டுள்ளது.
நம்மிடம் சில நேரங்களில் கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் வந்து சேரும். அவற்றை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் நாம் குழம்பிப் போயிருப்போம்.
ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி இத்தகைய கிழிந்த, எரிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என கூறுகிறது.
எந்த வகையான ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்?
ரூபாய் நோட்டு கிழிந்து, அழுக்காகி, அல்லது சிறிய அளவில் தீ பட்டிருந்தால், அதை நீங்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு வங்கிகளில் மாற்றும் போது, அந்த ரூபாய் நோட்டில் சேதம் அதிகமாக இருந்தால், அதற்கு குறைந்த அளவே தொகை கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் இந்த நோட்டுகள் மிகவும் சேதமடைந்திருந்தால், அதாவது, அதிக அளவில் தீயில் எரிந்தோ அல்லது குறிப்பிடத்தக்க பகுதிகள் காணாமல் போயிருந்தால், அவற்றை மாற்ற முடியாது.
மேலும், வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கி நிர்வாகங்கள் வாங்க மறுப்பு தெரிவிக்கலாம்.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எங்கே மாற்றுவது?
சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை உங்களுக்கு மிக அருகில் உள்ள எந்தவொரு தனியார் மற்றும் பொது வங்கி கிளைகளிலும் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
எரிந்த, மிக மோசமாக சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் அல்லது ஒன்றாக சிக்கியிருக்கும் நோட்டுகளை மாற்ற நீங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு செல்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்?
வங்கியில் உள்ள ரூபாய் நோட்டுகளின் சேதத்தை அளவிடும் அதிகாரியிடம் நோட்டை வழங்க வேண்டும்.
அவர் ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல் அளவிட்டின் படி, அந்த ரூபாய் நோட்டுக்கான சமமான அல்லது அதன் மதிப்பிற்குரிய புதிய ரூபாய் நோட்டை உங்களுக்கு வழங்குவார்.
சில நேரங்களில் மோசமாக எரிந்த அல்லது ஒன்றாக ஒட்டிக்கொண்ட ரூபாய் நோட்டுகள் போன்ற மிகவும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வங்கி கிளைகள் ஏற்க மறுக்கலாம், இது போன்ற சமயங்களில் நீங்கள் ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தை அணுகுவது சிறந்த முடிவாக இருக்கும்.
வரம்புகள் மற்றும் புகார் அளிப்பது எப்படி?
உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான சிதைந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அல்லது மொத்த மதிப்பு ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக இருந்தால் வங்கி நிர்வாகம் உங்களிடம் கூடுதல் ஆவணங்களை கேட்கலாம். அத்துடன் இந்த நடைமுறையின் செயலாக்கத்திற்காக வங்கி கிளைகள் உங்களை ரிசர்வ் வங்கியிடம் அனுப்பி வைக்கலாம்.
ஒருவேளை வங்கி நிர்வாகங்கள் சரியான காரணமின்றி உங்களிடம் சேதமடைந்த ரூபாய் நோட்டை மாற்ற மறுத்தால், இது தொடர்பாக நீங்கள் ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாம்.
உங்கள் புகாரின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் மீது அபராதம் விதிப்பது முதல் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எளிய நடைமுறையாக உங்களுக்கு தோன்றினாலும், ரூபாய் நோட்டுகளை கவனமாக கையாண்டு நெருப்பு, நீர் மற்றும் ரசாயனங்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.