குரங்கு அம்மை பரவுவது இப்படித்தானா? - மருத்துவ நிபுணர்களின் விளக்கம்
உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் நோய் தடுப்பு நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய பரிசோதனையில் இந்தியாவில் சிலருக்கு குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் குரங்கு அம்மை நோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். அதன்படி பாதிக்கப்பட்ட நபர் அல்லது பிராணி அல்லது வைரஸ் ஒட்டிக்கொண்டுள்ள பொருள் மூலம் இந்நோய் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த வைரசின் காலம் அல்லது நோய்த்தொற்றில் இருந்து அறிகுறிகள் தோன்றும் வரையிலான காலம் 6 நாளில் இருந்து 13 நாள்வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம், கணுக்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இந்த நோயின் அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் நீடிக்கலாம் என்றும், கடுமையான பாதிப்பும் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் இறப்புவிகிதம் 3 முதல் 6 சதவீதம் வரை இருக்கும். ஆப்பிரிக்கா நாட்டில் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான 10 பேரில் ஒருவருக்கு மரணம் நேரிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் பெரியம்மை தடுப்பூசியை இந்த நோய்க்கும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.