ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு எவ்வுளவு கோடி செலவு தெரியுமா? வெளியானது தகவல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது கடந்த அதிமுக அரசு. அந்த ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு தற்போது வரை நீடிக்கப்பட்டு வருகிறது
இந்தநிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் குறித்து, நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு இருந்தார். அதற்கு அரசின் பொது தகவல் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் கிடைத்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2021ஆம் ஆண்டு வரை மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்காக இதுவரை ரூ.3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வழக்கறிஞர்கள் கட்டணமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தற்போது ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், விசாரணை ஆணையம் இதுவரை 154 நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசால் கடைசியாக இந்த ஆணையத்தின் காலஅளவு 25.7.2021 முதல் 24.1.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணைக்கு இதுவரை ரூ.4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.