இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட் திட்டம் தோல்வி - என்ன காரணம்?
இன்று விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
PSLV-C61
EOS-09 எனப்படும் புவி கண்காணிப்புக்கான செயற்கைக்கோளை, PSLV-C61 ராக்கெட்மூலம் இன்று காலை 5;59 மணியளவில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது.
EOS-09 செயற்கைக்கோளை, சூரிய ஒத்திசைவு துருவ சுற்றுப்பாதையில் (SSPO) நிலைநிறுத்தப்படுவதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட சில நிமிடங்களில் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
காரணம் என்ன?
இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “ராக்கெட்டின் மூன்றாவது கட்டத்தை செயல்படுத்தும்போது, எங்களால் கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் இலக்கை பூர்த்தி செய்யமுடியவில்லை. நான்கு கட்டங்களாக ராக்கெட் பிரிய வேண்டும்.
மூன்றாவது கட்டத்தில் திட எரிபொருள் மோட்டார் செயல்பட வேண்டும். வளிமண்டலத்திற்கு வெளியே நடைபெறும் நிகழ்வு இது. வளிமண்டலத்திற்கு உள்ளே எனில் புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும்.
எனவே அதற்கு எதிராக உந்து சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், வளிமண்டலத்திற்கு வெளியே எனில், அதிக உந்து சக்தி தேவையில்லை. ஆனால் இந்த ராக்கெட்டில் 240 கிலோ நீயூட்டன்கள் உந்துதல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழுமையாக ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொண்டு நாங்கள் மீண்டு வருவோம்" என தெரிவித்துள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ PSLV ராக்கெட்களை பயன்படுத்தி வருகிறது. இதுவரை 63 PSLV ராக்கெட்களை ஏவியுள்ள நிலையில், அதில் 3 மட்டுமே தோல்வியில் முடிந்துள்ளது.