நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது? இவைதான் காரணம்
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
நிலநடுக்கம்
மியான்மரில் ஏற்பட்ட இருமுறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது.
இந்த பேரிடரில் 10,000 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
ஒரு நாட்டையே புரட்டிப்போட்ட நிலநடுக்கம் குறித்து காண்போம். பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்படும்போது தளத்தட்டுகள் நகர்வதனால் ஏற்படும் அதிர்வுதான் நிலநடுக்கம். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம்.
இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால் அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும்.
லேசான நிலநடுக்கம் ஏற்படும். ஆனால், 7 ரிக்டருக்கும் மேல் அதிர்வுகள் பதிவானால், அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.
டெக்டோனிக் தட்டு
நம் பூமியின் லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. இவை பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகள் ஆகும்.
பூமியின் கடினமான பாறைகள் காற்றினாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு, மலையடிவாரங்களில் தட்டுகளாக படிக்கின்றன.
இதே செயல்முறை ஆண்டுதோறும் நடப்பதால், டெக்டோனிக் தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிக்கின்றன. இவை தொடர்ந்து மெதுவாக நகரும்போது, அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக் கொள்ளும்.
பின்னர் விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை ஏற்படுத்தும். அதாவது, பூமியின் இடைபடுகை வழியாக பயணிக்கும் அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுவதால், இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை உலுக்குகிறது.
நிலநடுக்கமானி
நிலநடுக்கங்கள் நான்கு முக்கிய வகை மீள் அலைகளை உருவாக்குகின்றன. அவற்றில் இரண்டு பூமிக்குள் பயணிக்கும் உடல் அலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
மற்ற இரண்டும் பூமியின் மேற்பரப்பில் பயணிப்பதால் மேற்பரப்பு அலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
நிலநடுக்கமானி எனும் ஒரு கருவியால், நில அதிர்வு அலைகளின் வீச்சு மற்றும் அதிர்வெண் ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன.
பூமி மற்றும் அதன் மேற்பரப்பு அமைப்பு பற்றிய தகவல்களை இந்த கருவிகள் பதிவுசெய்து வருகின்றன. மேலும், மனிதர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் மூலம் சில செயற்கையான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. எண்ணெய், எரிவாயு போன்ற சேகரிப்பு முறைகள் இவற்றுக்கு காரணமாக அமைகின்றன.
நில அதிர்வு ஆய்வுகளின்படி, செயற்கையான நில அதிர்வு அலைகள் மூலம்தான் சில புதைபடிவ எரிபொருள் தொழில்கள், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பற்றிய தரவைக் கண்டுபிடிக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.