என் கட்சிக்காக என் வீட்டையே கொடுத்துவிட்டு விடுதியில் தங்கினேன் - கமல் உருக்கம்!
சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்புரை அனைத்தும் முடிந்துவிடும். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது மிக விரைவில் அறியும் தருணம் நெருங்கி வருகிறது. இதனையடுத்து, இத்தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே உடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் களத்தில் இறங்கி உள்ளது.
அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அங்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் களத்தில் இறங்கியிருக்கிறார். இதனால் கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசனுக்கு இடையே இங்கு கடும் போட்டி நிலவு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பெரிய மோதலே உருவானது.
கோவை தெற்கு தொகுதியில் தான் வெற்றி பெற்றுவிட்டால் முன் மாதிரியான தொகுதியாக மாற்றிக்காட்டுகிறேன் என்று உறுதி கொடுத்தார் கமல். தான் வெற்றி பெற்றுவிட்டால் தனது முகவரியை கோவை தெற்கிற்கு மாற்றிக்கொள்கிறேன் என்றார். இதனையடுத்து, ஜெயித்துவிட்டால் சென்னைக்கு ஓடிவிடுவார் கமல். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாகிவிடுவார். அப்புறம் தொகுதியை கவனிக்க மாட்டார் என்று எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று செய்தியளர்களை சந்தித்தார் கமல். அப்போது கமல் பேசுகையில், எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். யாருடைய மிரட்டலுக்கும் நான் பயப்படவில்லை. என் வீடு என் இடம் எல்லாவற்றையும் கட்சிக்காக கொடுத்துவிட்டு விடுதியில் தங்கியுள்ளேன்.
அரசியலுக்கு நடிப்பது இடையூறு என்றால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை சுகாசினி மணிரத்தினம், சமக கட்சியின் ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.