எங்களுக்கும் பசிக்கும்..! தெருநாய்களுக்கு கோழிக்கறி சமைத்து பரிமாறிய சமூக ஆர்வலர்கள்..!
ஓசூர் மாநகரில் முழு ஊரடங்கால் உணவின்றி சுற்றி திரிந்த தெருநாய்களுக்கு சமூக ஆர்வலர்கள் கோழிக்கறியுடன் உணவு அளித்து பசியாற்றிய வீடியோ காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் மாநகர் தொழிற்சாலைகளும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இங்கு தமிழகத்தின் பிற மாவட்ட தொழிலாளர்களும், வடமாநில தொழிலாளர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மே 10-ம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
குறைந்த அளவிலான பொதுமக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய நிலையில், தெருநாய்கள் உணவின்றி தெருக்களில் தவிந்து வருகின்றன.
இதனை உணர்ந்த சமூக ஆர்வலர்கள் கோழிக்கறியுடன் சுவையாக சமைத்து தெருதெருவாக சென்று அங்குள்ள நாய்களுக்கு பாக்குமட்டையில் உணவளித்துள்ளனர்.
பசிக்குது என்று கூட கூறமுடியாத 5 அறிவு ஜீவன்களின் பசியை உணர்ந்து சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து பசியாற்றிய சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.