ஓசூரில் ஊரடங்கால் அவதிப்படும் ஏழை, எளியோருக்கு திமுகவினர் உதவ வேண்டும் என பொதுமக்கள் முதல்வருக்கு கோரிக்கை..!
ஓசுரில் கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது முன்னாள் அமைச்சர் ஏழை மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியதால் தற்போது திமுகவினர் ஏன் அதை வழங்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்தாண்டு கொரோனா முதல் அலையின் போது மாத கணக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் காய்கறிகளின் விலை கடும் சரிவை சந்தித்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் மாநகர பகுதிகளில் உணவு பொருட்களுக்காக பொதுமக்களும் அவதிபட்ட சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நேரடியாக விவசாயிகளிடம் சென்று தக்காளி, கேரட், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்டவற்றை உரிய விலைக்கு வாங்கி, ஒசூர் மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், தெருக்களிலும் 1500க்கும் அதிகமான டன் காய்கறிகளுடன், மளிகை பொருட்களை தொகுப்பை வழங்கி இருந்தார். தற்போது இரண்டாம் அலையில் 16வது நாளாக முழு ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், திமுகவினர் ஏன் உதவிசெய்யவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், முதல்வர் ஸ்டாலின் ஏழை, எளியோருக்கு உதவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.