40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத தமிழகத்தில் ஓர் கிராமம் தவிப்பு! யார் இவர்கள்?
ஓசூர் அருகே 40 ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தி தராததால் தங்கள் சொந்த செலவிலேயே கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து மண் சாலை அமைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு நீர் தேக்க சிற்றணை அமைந்துள்ளது. 1986ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை 37 கன அடிகளை கொண்டது.
1986 ஆண்டு கட்டப்பட்ட அணை அமைவிடத்தில் இருந்த ஒன்டியூர் என்னும் கிராமத்தை, 1982 ஆம் ஆண்டு அதிகாரிகள் அப்புறப்படுத்தி அருகே உள்ள வனப்பகுதியில் பொதுமக்களுக்கு இடமளித்துள்ளனர்.
அங்கிருந்த கிராம மக்களை வெளியேற்றியபோது ஒரு வீடு, 3 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குவதுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை எனக்கூறி வேறு இடத்தில் அமர்த்தியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வசதியான கிராமத்தை விட்டு வனப்பகுதியில் குடியேறி 40 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளநிலையில் ஒன்டியூர் கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி என்பதே இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் எந்த பலனும் கிடைக்காததால் சொந்த செலவிலேயே கிராம மக்கள் ஒன்றிணைந்து தற்காலிக மண் சாலை அமைத்துள்ளனர்.
இனியாவது தார்சாலை, மின்சாரம் வழங்குவீர்களா என கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவீன காலத்தில் சாலை, மின்சாரத்திற்கு 40 ஆண்டுகளாக பாடுபடும் இவர்களின் அவலநிலை இனியாவது தீருமா என கிராமமக்கள் எதிர்பார்த்து கொண்டே காத்திருக்கின்றனர்.