கர்நாடகாவில் முந்தியடித்து குவிந்த ஓசூர் மதுபிரியர்கள்..! ஊரடங்கு எதிரொலியால் மதுக்கடையில் நீண்ட வரிசை..!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேவையான மதுபாட்டில்களை வாங்க கர்நாடக மதுக்கடைகளில் ஏராளமான மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் மே 10 முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக தமிழக அரசு மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் பொதுமக்களின் தேவைக்கேற்ப இரண்டு நாட்களுக்கு அனைத்து கடைகளையும் திறக்கவும், மதுக்கடைகளை திறக்கக்கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் உள்ள மதுபிரியர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஒரு வாரத்திற்கு தேவையான மது பாட்டில்களை வாங்க ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.