உரிமையாளரை இறக்கிவிட்டு காரை கடத்திய போலி நிருபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கார் உரிமையாரை இறக்கிவிட்டு காரை கடத்திய போலி நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை கடத்தி விற்றதாக கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்துள்ளனர். சிறையில், ஒசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மல்லேஷ் என்பவருடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்ப்புட்டுள்ளது.
மல்லேஷ் பல வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், ரேஷன் அரிசி கடத்தும் தொழில் குறித்து பேசி உள்ளனர், மல்லேஷ் கடத்தல் தொழிலுக்கு சரியான நபராக இருப்பார் என நம்பிய கிருஷ்ணன் விடுதலைக்கு பின் பேசிக்கொள்ளலாம் என கூறி உள்ளார்.
இந்தநிலையில் இருவரும் விடுதலையாகி ஒசூர் அடுத்த இராயக்கோட்டை சாலையில் சந்திப்பதற்காக மல்லேஷை அழைத்துவிட்டு கிருஷ்ணன் டாடா சுமோ காரில் சென்றுள்ளார். மல்லேஷ், அவருடன் போலி நிருபர் கௌரிசங்கர் மற்றும் ஒரு நபர் என வந்துள்ளனர்.
காரில் பேசிக்கொள்வோம் எனக்கூறி தொரப்பள்ளி கிராமத்திற்கு அருகே சென்றபோது மூவரும் கிருஷ்ணனை கீழே இறக்கி விட்டு டாடா சுமோ காருடன் தப்பி உள்ளனர்.. கார் கடத்தப்படுவதாக கிருஷ்ணன் கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரின் எண் உள்ளிட்டவையை ஒசூர் டிஎஸ்பி முரளி அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவர் அனைத்து பகுதிகளிலும் போலீசாரை உஷார்ப்படுத்தியபோது, ஒசூர் பேருந்து நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுக்குறித்து கிருஷ்ணன் ஒசூர் மாநகர போலீசில் காரை கடத்தியதாக கொடுத்த புகாரின் பேரில், காரில் இருந்த போலி நிருபர் கௌரி சங்கரை கைது செய்தனர்.
தலைமறைவான பல வழக்கில் தொடர்புடைய மல்லேஷ், மற்றுமொரு நபர் என இரண்டு பேரை போலிசார் தேடி வருகின்றனர். நகர காவல்நிலையத்தில் இருந்த போலி நிருபரை படம்பிடிக்க சென்ற பத்திரிகையாளர்களை போலி நிருபர் கௌரி சங்கர் கடுமையாக பேசி மிரட்டல் விடும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.