சசிகலா உடல்நிலை தற்போது எப்படி உள்ளது- மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா, இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகவுள்ளார். கடந்த 20ம் தேதி ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சிறைத்துறை, சசிகலாவை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தது.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிய நிலையில், சிறையில் இருந்து அவர் விடுதலையானாலும், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும் உதவியுடன் நடப்பதாகவும், அறிகுறி இல்லாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது
மேலும், செயற்கை சுவாச கருவியின் உதவியின்றி தொடர்ந்து இயல்பாக சசிகலா சுவாசித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.