கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார்.
இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வி.எஸ்.பாபு, அப்பகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு திடீரென வி.எஸ்.பாபு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த ஒரு வராத்திற்கும் மேலாக தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கை..,
"தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தொடர் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் உள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையிலும் திருப்திகரமாகவும் உள்ளது.
அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக உள்ளது.
மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை முன்னேற்றமடைவதைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.