இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா: தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
ஒசூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக வருவாய்த் துறையினர் அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை அருகே இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 145 குடும்பங்களில் 528 பேர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வருபவர்களில் கடந்த ஒரு வாரமாக அடுதடுத்து 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மட்டும் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் 32 பேர் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள வருவாய்த்துறையினர் யாரும் வெளியில் செல்ல வேண்டாம், புதிய நபர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
முகாமிற்கு செல்லக்கூடிய பகுதிகள் அடைக்கப்பட்டு போலிசாரும் நுழைவு பகுதியில் அமர்த்தப்பட்டுள்ளனர்