ஹோர்முஸ் நீரிணை : பாதுகாப்பு நடவடிக்கைக்கு தயார் என நேட்டோ நாடுகள் கூட்டறிக்கை
ஈரானின் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு வழங்க தயார் என்று நேட்டோ நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல உதவ தயார் என நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின.

அதனை தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திநடத்தி வருகின்றது.
தனது முக்கிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிசக்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கத்தாரின் எரிவாயு மையம் மீண்டும் தாக்கப்படும் பட்சத்தில் ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுமையாக அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
இந்நிலையில், ஈரானில் உள்ள மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது.
இது ஈரானின் மொத்த எரிவாயு உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கைக் கொண்டிருப்பதோடு, பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலுக்கான மூலப்பொருட்களை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு ஆலைகளில் ஒன்றான ராஸ் லஃபான் ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதனால், இந்த ஆலையில் மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்க 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்று கத்தார் அரசு குறிப்பிட்டுள்ளது.
உலகின் சமையல் எரிவாயு விநியோகத்தின் ஐந்தில் ஒரு பங்கு ராஸ் லஃபானில் இருந்தே பெறப்படும் நிலையில், இந்த ஆலையில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முடக்கமானது உலகின் சமையல் எரிவாயு விநியோகத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எப்-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அதேநேரம், இஸ்ரேல் ஈரானில் உள்ள சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனிமேல் எவ்விதத் தாக்குதலையும் நடத்தாது என்று உறுதியளித்துள்ள டிரம்ப், கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் புதிய தாக்குதல்கள் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக எதிரி நாட்டு கப்பல் சென்றால் தாக்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஈரானின் எச்சரிக்கையால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் நேட்டோவுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்ப் அழைப்பை நேட்டோ நாடுகள் முதலில் நிராகரித்த நிலையில் தற்போது உதவ தயார் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான முறையில் எரிபொருள் போக்குவரத்து நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.