கலப்புத் திருமணம் - இளைஞரை கொன்று கல்லைக் கட்டித் தூக்கி போட்ட கொடூரம்
கலப்பு திருமணம் செய்ததால் கார் டிரைவரை படுகொலை செய்து கல்லைக்கட்டி குளத்தில் வீசிய கொடூரம் தென்காசியில் அரங்கேறியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த தென்காசியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
இது கலப்புத் திருமணம் என்பதால் இந்த திருமணத்திற்கு அரவிந்தனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி அன்று வேலைக்கு சென்ற அரவிந்தன் வீடு திரும்பவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் புலியூர் கிராம நிர்வாக அலுவலர் உமாமகேஸ்வரியிடம் கீழப்புலியூரைச் சேர்ந்த பொன்னரசு என்பவர் கலப்பு திருமணம் செய்ததால் அரவிந்தனை கொலை செய்து அருகில் உள்ள கல்குவாரியில் கல்லைக் கட்டித் தூக்கி போட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ந்த கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரவிந்தனின் உடலை மீட்டுள்ளனர்.
அரவிந்தன் படுகொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் இந்த படுகொலை வழக்கில் பெண்ணின் உறவினர் சிலர் சம்பந்தப் பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.