”எனக்கு 143 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளனர்“ யார் அந்த அதிமுக அமைச்சர்?
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற உள்ளன. இதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவை தெற்கு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் வானதிசீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, “தொழில் துறைக்கும், தொழிற்சாலைகளுக்கும், மத்திய அரசிடமிருந்து வரும் திட்டங்களுக்கெல்லாம் உதவிகரமாக இருந்து செயல்படுபவர் வானதிசீனிவாசன்.
தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் எந்த பணிகளையும் செய்யவில்லை. ஏனென்றால் அவருக்கு எதுவுமே தெரியாது. நான் அப்படி இல்லை. உள்ளாட்சித்துறை அத்துனையும் அத்துப்படி, தமிழகத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளையும். ஏராளமான வளர்ச்சிப்பணிகளையும் செய்திருக்கிறேன்.
இனியும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. என்னுடைய பணிகளை பாராட்டி, எனக்கு 143 விருது வழங்கி கவுரவித்துள்ளனர். எப்படியாவது முதல்வராக வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் என்னம். கருணாநிதி இருக்கும் வரை தலைவராக முடியவில்லை. அவரது மறைவிற்கு பின்பு தலைவர் பதவியை தானாக எடுத்துக்கொண்டார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளை கொடுத்து தனது குடும்ப கட்சியாக தி.மு.க.வை மாற்றிவிட்டார்.

நுாறு நாளில் அப்படி பன்னுவேன் இப்படி பன்னுவேன் என்கிறார். 2006ல் தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆண்ட போது, துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின் கோவை மாவட்டத்துக்கு என்ன செய்தார். நாங்கள் செய்ததை சொல்கிறோம், தைரியமாக மக்களை சந்தித்து வாக்குகேட்கிறோம்.
ஆனால் தி.மு.க.வினரால் முடியுமா, ஏதாவது செய்திருந்தால் தான் சொல்லமுடியும். மக்களை ஏமாற்றமுடியுமா?. கொரோனா காலத்தில் நாங்கள் களமிறங்கி பணிமேற்கொண்டோம். மக்களுக்கு தேவையான உணவு, மளிகை, மருந்துப்பொருட்களை வழங்கினோம். ஆனால் ஸ்டாலின் கையுக்கு கிளவுஸ் மாட்டிக்கொண்டு ‘டிவி ’ யிலும் வீடியோவிலும் மட்டுமே பேசினார் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
தேர்தலுக்கு மட்டுமே பிரசாரத்துக்கு வருபவர்கள் தி.மு.க.,வினர் அப்புறம் மக்கள் அவர்களை தேடவேண்டிய நிலை ஏற்படும்.
அதனால் மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அ.தி.மு.க., கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் வானதிசீனிவாசனுக்கு வாக்களித்து வெற்றிப்பபெற செய்ய வேண்டும். இவ்வாறு வேலுமணி பேசினார்.