மீண்டும் தலைதூக்கும் கொரோனா; அதிகரிக்கும் உயிரிழப்பு - நடுங்கும் ஆசிய நகரங்கள்
திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது உலக நாடுகளை அஞ்சவைத்துள்ளது.
கொரோனா பரவல்
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.
மே மாதம் முதல் வாரம் வைரஸ் பாதிப்பு சுமார் 28% அதிகரித்து 14,200ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் 30% அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக இணை நோய் உள்ளிட்ட ஆபத்துகள் இருப்போர் பூஸ்டர் டோஸ் வேக்சினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் அபாயம்
ஹாங்காங்கில் கொரோனாவின் செயல்பாடு இப்போது மிக அதிகமாக உள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அங்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சில உயிரிழப்புகளும் கொரோனாவால் ஏற்பட்டுள்ளதாக அந்நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் தெரிவித்துள்ளார். தற்போது பரவும் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. இவை சில வாரங்களில் அப்படியே மறைந்துவிடும்.
இருப்பினும், இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்ற சூழலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.