திருமணத்திற்கு அனுமதி மறுத்ததால் கொலைவெறி தாக்குதல்: எட்டு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மகிழடியில் ஒருதலை காதல் விவகாரத்தில் 8 மாத குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ஏஞ்சலின் நல்லதாம் - ஆனந்த் செலின் தம்பதியினர் இருவரும் வெளிநாட்டில் பணிபுரிவருகின்றனர்.
இவர்களுக்கு அக்ஷா குயின் என்கிற 8 மாத குழந்தை உள்ளது. தங்களின் குழந்தையை அவரது பெற்றோர்கள் ரசூல் ராஜ் - எப்சிபாய் பொறுப்பில் விட்டு சென்றுள்ளார். தாத்தா பாட்டி அரவணைப்பில் அக்ஷ்யா குயின் வளர்ந்து வந்துள்ளார். ரசூல் ராஜ் - எப்சிபாய்க்கு நான்கு பெண்கள் உள்ளனர். கடைசி மகள் ஏஞ்சல் பிளஸ்சி நர்சிங் முடித்து கோவையில் பணி செய்து வருகிறார். இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இளைஞர் சிவசங்கரன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கரன் மகிழடியில் உள்ள ரசூல்ராஜ் வீட்டிற்கு சென்று ஏஞ்சல் பிளஸ்சியை திருமணம் செய்ய பெண் கேட்டதாக கூறப்படுகிறது. இந்துவாக இருப்பதால் ரசூல்ராஜ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிவசங்கரன், ரசூல்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ரசூல்ராஜ் வாக்கிங் சென்று விட்டதால், எப்சிபாய் மற்றும் அவரது கடைசி பெண் மற்றும் குழந்தை அக்சயா குயின் இருந்துள்ளனர்.
அரிவாள் மற்றும் பெட்ரோலுடன் உள்ளே நுளைந்த சிவசங்கரன் எப்சிபாயை வெட்ட முயன்றுள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அக்சயா குயின் மீது வெட்டு விழுந்துள்ளது. இதில் குழந்தை அக்ஷ்யா குயின் வெட்டு பட்டு சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார். மேலும் சிவசங்கரன் எப்சிபாயையும் சராமாரியாக வெட்டியுள்ளார்.
மூன்றாவது பெண் மற்றொரு ரூமிற்கு சென்று பூட்டியதால் வெட்டில் இருந்து தப்பினர். சப்தம் கேட்டு வாக்கிங் சென்ற ரசூல்ராஜ் வீட்டுக்கு வந்தார். அவரையும் சிவசங்கரன் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவசங்கரனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் ரசூல்ராஜ், அவர் மனைவி எப்சிபாய் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவலறிந்த திருக்குறுங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறால் 8 மாத குழந்தை உயிரழந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.