சட்டமன்ற தேர்தல் பரப்புரை : அமித்ஷா இன்று கோவை வருகை

Amit Shah Tamil nadu Election
By Vinoja Apr 18, 2026 02:01 PM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 18, 2026) இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் அவர், நாளை காலை கோவை மாவட்டம் சிவகிரியில் நடைபெறும் சாலைக் காட்சியில் (Road Show) பங்கேற்கிறார். 

சட்டமன்ற தேர்தல் பரப்புரை : அமித்ஷா இன்று கோவை வருகை | Home Minister Amit Shah To Visit Coimbatore Today

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்துச் சென்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றிரவு கோவைக்கு வருகிறார்.

இதனைத்தொடர்ந்து அவர், நாளை காலை 10 மணியளவில் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

மேலும் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து சிவகிரியில் இருந்து தீரன் சின்னமலை சிலை வரை சாலை வலம் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து சென்னை செல்லும் அமித் ஷா, மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து சாலை வலம் செல்ல உள்ளார்.

முன்னதாக மாலை 4.15 மணியளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமித் ஷா வழிபட உள்ளார். அதன்பின் மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை சாலை வலம் சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டுகிறார். பரப்புரையை முடித்துக் கொண்டு அமித் ஷா நாளை இரவு டெல்லி திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.