சென்னை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, தேசிய கட்சியின் தலைவர்களான அமித்ஷா ராகுல் காந்தி உள்பட பலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதனையடுத்து, சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ள நிலையில் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்.
விழுப்புரம் மற்றும் புதுவை நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து இன்று அதிகாலை கிளம்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சற்றுமுன் சென்னை வந்தடைந்தார். விழுப்புரம் புதுவையில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்றும் அது மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை வந்துள்ள அமிர்ஷா சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு விமானம் மூலம் புதுவை செல்கிறார் என்றும் அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விழுப்புரம் செல்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது. மேலும் இன்று இரவு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.