பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை

hollywoodactor willsmith banned10years
By Irumporai Apr 09, 2022 03:58 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தின் தலைமுடி குறித்து கிண்டலாக பேசினார்.

இதனால் கோபமடைந்த வில் ஸ்மித்,மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.இந்த நிகழ்வு ஆஸ்கர் விருது விழாவில் மட்டுமல்லாமல்,உலகில் உள்ள பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

பின்னர்,வன்முறை என்பது எந்த விதத்திலும் தவறானது தான் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என வில் ஸ்மித் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படையாக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

இந்த விவகாரத்தில் ஆஸ்கார் குழு கண்டனம் தெரிவித்து,கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் மேடையில் வைத்து அறைந்த உடனேயே,அவரை கைது செய்வதற்கு போலீஸ் தயாராக இருந்ததாக கூறியது.ஆனால் கிறிஸ் ராக் வில் ஸ்மித்தை கைது செய்ய வேண்டாம் எனவும்,தான் நன்றாக இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்தது சர்ச்சையான நிலையில் ஆஸ்கர் அகாடமி எடுக்கும் நடவடிக்கையை ஏற்பதாக கூறி உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் விலகியிருந்தார்.

இந்த நிலையில்,ஆஸ்கர் விருது விழா,ஆஸ்கர் அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.சக நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்ததால் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் தெரிவித்துள்ளது.