ஹாலந்தின் கெலா லில்லி மலர் உதகை தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கியது
ஹாலந்து நாட்டில் பூக்கும் கெலா லில்லி என்னும் மலர் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அதிகளவில் பூத்து குலுங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை சீசனில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மலர்கள் பூக்கும்.
இவைகளை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிவார்கள். ஆனால் கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த ஆண்டும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மாதம் 20-ம் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது.
மேலும் மலர் கண்காட்சியின் போது மலர் மாடங்களில் இந்த பூக்கள் வைக்கப்படுவதை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பர். அதேபோல் இந்த ஆண்டு ஹாலந்து நாட்டை பிறப்பிடமாக கொண்ட கெலா லில்லி மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு, இந்த கோடை சீசனுக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு பழுப்பு, சிவப்பு மற்றும் கருப்பு உள்ளிட்ட ஐந்து வண்ணங்களில் இந்த கெலா லில்லி பூக்கள் பூத்து கண்ணாடி மாளிகை நுழைவுவாயிலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஐந்து வண்ணங்களில் பத்து குலுங்கும் கெலா லில்லி ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் இன்றி அரசு தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.