கன மழை எதிரொலி - சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (15.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இது நாளை காலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர், அது வடக்கு-வடகிழக்கு திசையில் மீண்டும் வளைந்து நவம்பர் 17 அன்று ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.