கனமழை எதிரொலியால் நீலகிரியில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை..!
கனமழையால் எதிரொலியால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
நடப்பாண்டில் இயல்பை விட 94 % அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மேலும் நீடிக்கும் எனவும் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அத்துடன் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 4ம் தேதி நாளை நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக்கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார். அத்துடன் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.