கடந்த 4 நாட்களில் கொடைக்கானலில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தன
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4 நாட்கள் விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் வனப்பகுதியிலும் நகரை ஒட்டிய சுற்றுலா இடங்களிலும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் வார விடுமுறை நிறைவு பெற்றதன் காரணமாக இன்று மாலை முதல் ஓரளவு கூட்டம் குறைந்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக பெய்த மழை ஓய்ந்து இயல்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அத்துடன் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா அதிகாரிகள் கூறுகையில், கடந்த 4 நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் கொடைக்கானல் நகருக்கு வருகை புரிந்துள்ளனர் எனக் கூறினர்.
நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்ததால் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
தொடர் பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வாகன நிறுத்துமிடம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.