ஒரே மாதத்தில் 3-வது முறை : ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தொடரும் தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக மதவெறி சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த 12-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து கோயில்கள் தாக்குதல்
கோவிலின் சுவர் மீது இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான இந்துஸ்தான் முர்தாபாத் என வர்ணம் பூசி உள்ளனர். இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கு கேரள இந்து சமூகமும் கண்டனம் தெரிவித்தது. பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோவில் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

இதனை தொடர்ந்து, கடந்த 16-ந்தேதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தெரிய வந்தது. கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. அதிலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் இருந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆல்பர்ட் பூங்கா பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில் மீது இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.