இந்துக்களுக்கு எதிரான விஜயின் அரசியல் செயல்பாடுகள் - கொந்தளிக்கும் இந்து மக்கள் கட்சி... காரணம் என்ன?
இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதையே மதச்சார்பின்மை என நினைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் வரிசையில் தனது கட்சியை விஜய் இணைத்துள்ளதாக இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விஜய்
இது தொடர்பாக, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்ட இந்துக்களின் எழுச்சி திருவிழாவான விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு வாழ்த்து சொல்லாதது விஜயின் அரசியல் பாதையை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
நடிகர் விஜய்யாக அவர் வாழ்த்துக் கூறாமல் இருந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்படப்போவதில்லை. ஆனால், அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் தலைவராகத் தன்னை நிலைப்படுத்தத் துடிக்கும் போது பெரும்பான்மை மக்களின் விழாவை அலட்சியமாகக் கடந்து செல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் விஸ்வாஸ் சுந்தர் என்பவரது தயாரிப்பில் விஜய் நடித்த ஆபாச, வன்முறை காட்சிகள் நிறைந்த தனது வணிக ரீதியிலான திரைப்படத்திற்கு இந்துக்களின் புனித நூலான ‘கீதை’யின் பெயரை வைத்தனர். உடனடியாக கடும் எதிர்ப்பினை பதிவு செய்து போராட்டங்கள் நடத்தியதோடு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து
அந்த திரைப்படத்தின் பெயரை ‘புதிய கீதை’ என மாற்ற வைத்தோம். ‘புதிய கீதை’ என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் விஜயின் இந்து விரோத செயல்பாட்டிற்கான உதாரணம் காட்டவே இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறோம்.
கண்டனம்
திரைப்படங்கள் மூலமாக இந்து தர்மத்திற்கு எதிராகச் செயல்படுவது, இந்துக்களின் விழாக்களுக்கு வாழ்த்துக் கூறாமல் தவிர்ப்பது போன்ற விஜயின் நடவடிக்கைகள் இவரது அரசியல் பிரவேசத்திற்குப் பின்னணியில் கிறிஸ்தவ மிஷினரிகள் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.
ஏனென்றால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய் அடுத்த சில நாட்களில் வந்த ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இந்த நிலைப்பாடு விஜயின் அரசியல் பயணத்திற்கு உதவாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான விஜயின் அரசியல் செயல்பாடுகள் தொடருமேயானால் அரசியலில் உச்சம் தொட நினைக்கும் அவரது கனவு மாளிகையை இந்துக்கள் தகர்த்தெறிவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.