பிரதமர் மோடிக்கு எதிரான வேட்பாளரை வாபஸ் பெற்ற இந்து மகா சபை - என்ன காரணம்?
மோடிக்கு எதிரான வேட்பாளரை இந்து மகா சபை வாபஸ் பெற்றுள்ளது.
மக்களவை தேர்தல்
உ.பி.யின் 80 தொகுதிகளில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், வாராணசி தொகுதியில் 2014 முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து இந்து மகா சபை சார்பில் திருநங்கையான ஹிமாங்கி சகி மனு தாக்கல் செய்திருந்தார். ராமர் கோயில் வழக்கில் இந்து மகா சபையும் ஒரு மனுதாரர். ஆனால், அறக்கட்டளையில் இந்துமகா சபையினர் சேர்க்கப்படவில்லை.
இந்து மகா சபை வாபஸ்
மேலும், ராமர் கோயில் விழாவிலும் இவர்கள் அழைக்கப்படவில்லை. இதற்காக நிர்மோஹி அகாடாவை சேர்ந்த திருநங்கையான ஹிமாங்கி சகியை தங்கள் வேட்பாளராக நிறுத்தியது. தற்போது, இந்துமகா சபை அமைப்பினர், எந்தநிபந்தனையும் இன்றி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி மஹராஜ் கூறும்போது, “அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததுடன் ராமர் கோயிலையும் பிரதமர் மோடி கட்டியுள்ளார். எனவே, மாறுபட்ட கொள்கை கொண்டிருந்தாலும் அவரை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டும்.
பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் போட்டியிட்டபோது, முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றன. இதுபோன்ற ஜனநாயக முறை மீண்டும் தழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.