‘நாங்க காந்தியவே விட்டு வைக்கல..நீங்க மட்டும் என்ன’ - கம்பி எண்ணும் இந்து மகாசபா தலைவர்
கர்நாடகா முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இந்து மகாசபா தலைவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூட்டில் என்ற பகுதியில் உள்ள இந்து கோவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதால் அதனை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் அம்மாநில பாஜக அரசு அந்த கோயிலை இடித்தது.
இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்து மகா சபை நிர்வாகிகள் சிலர் இந்துக்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு எதிரான யாரையும் விடமாட்டோம் என பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
அதில் பேசும் அகில பாரத் இந்துமகா சபையின் மாநிலப் பொதுச் செயலாளர் தர்மேந்திரா, “நாங்கள் காந்தியையே விட்டு வைக்கவில்லை; நீங்கள் யார்?” என முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
தர்மேந்திராவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, தர்மேந்திரா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.