'' ஹலால் இறைச்சியை இந்துக்கள் உண்ணக்கூடாது ‘’ - பிரச்சாரங்கள் ,தாக்குதல்.. கர்நாடகாவில் நடப்பது என்ன?
கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனையாளர் மீது பஜ்ரங் தள உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஹலால் செய்து விற்கும் இறைச்சியை இந்துக்கள் யாரும் வாங்கக் கூடாது என்று இந்துத்துவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுதொடா்பாக சமூக வலைதளங்களில் இந்துத்துவா அமைப்புகளால் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் இறைச்சி கடைகளில் இருந்து ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை வாங்க வேண்டாம் என கூறி பஞ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்ராவதியில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஹலால் இறைச்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளர் ஒருவக்கும் பஜ்ரங் தள் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதில் அந்த கடைக்காரரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல் ஷிவமொக்கா மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹலால் இறைச்சிக்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்து மாநில அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்று கர்நாடக முதல்வர் பொம்மை கூறியிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.