ஹிந்தி மொழியை ஏன் கற்க கூடாது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

By Thahir Nov 19, 2021 10:00 AM GMT
Report

 ஏன் ஹிந்தி மொழியை கற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

'மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்தும் போது ஹிந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள்.அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை,

விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி ஹிந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள்.

இவ்வாறு தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து அறிவிக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று (நவ.,19) நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது?.

ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளத்தான். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை, மொழியாக கையாள வேண்டும்,' எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.