இனி டெஸ்ட் போட்டிகளை பார்க்க மாட்டோம் - கடுப்பான இந்திய ரசிகர்கள்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக விக்கெட்டை இழந்த புஜாரா மற்றும் ரஹானே ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. 

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 29 ரன்களும், ரிஷப் பண்ட் 100 ரன்களும் எடுக்க இந்திய அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய அந்த அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 111 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மீண்டும் ஒருமுறை சொதப்பி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த போட்டிகளில் ரஹானே மற்றும் புஜாரா சொதப்பிய பொழுது இனி இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க கூடாது என கோரிக்கை வைத்திருந்த ரசிகர்கள், தற்போது பொறுமையை இழந்து புஜாரா மற்றும் ரஹானேவிற்கு இனி வாய்ப்பு கொடுத்தால் டெஸ்ட் போட்டிகளையே பார்க்க போவது இல்லை என்ற மனநிலைக்கே வந்துவிட்டதாக சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்