இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை - ஒன்றிய அமைச்சர் உறுதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவின் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டம் நாளடைவில் அந்த மாநிலத்தின் பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் பரவ தொடங்கி பெரும் பதற்றதை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்த வருவதற்கு அனுமதி கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.இதனிடையே இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு எந்த தடையும் இல்லை என ஒன்றிய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இந்தியாவில் ஹிஜாபுக்கு தடை இல்லை என கூறினார்.
‘இந்த விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. இந்த நாட்டில் எந்த உடையையும் அணிய மக்களுக்கு உரிமை இருக்கிறது. சில நிறுவனங்கள் சில உடை கட்டுப்பாடுகளை பின்பற்றலாம்.
உரிமைகளைப்போல கடமைக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.