ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 2வது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - ஈரான் அரசு அதிரடி...!
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 2வது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி ஈரான் அரசு அதிரடி காட்டியுள்ளது.
மாஷா அமினி மரணம்
ஈரான், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசாரால் கடுமையாக தாக்கினார்கள். இத்தாக்குதலில் அப்பெண் பலத்த படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 17ம் தேதி மாஷா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவியது.
இப்போராட்டத்தில் இறங்கிய முஸ்லீம் பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தனர். ஹிஜாப்பை தீ வைத்து எரித்தனர். தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தூக்கு தண்டனை நிறைவேற்றம்
ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக மொஷென் ஷெகாரி என்ற நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருக்கிறது.
ஹிஜாப் போராட்டத்தில் முதன்முதலாக மொஷெனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரான் அரசு ஹிஜாப் போராட்டத்தில் பங்கேற்ற 2-வது நபருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றி இருக்கிறது.
இந்த போராட்டத்தில் 2 ஈரான் பாதுகாப்பு படை வீரர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மஜித்ரிசா ரஹ்நவர்டு என்ற நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.