இனி இதுதான் தேசியக் கொடியா? – கண்டனம் தெரிவித்த கனிமொழி
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க இஸ்லாமிய மாணவிகள் மறுத்துள்ளனர்.
எங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வருகின்றனர். இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் விரட்டியடித்தனர்.
அதேபோல, சிமோகா மாவட்டத்தில் தேசிய கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றிய விவகாரம் இந்தியா முழுவதும பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், தேசிய கொடியை அவமதிக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது இனி இதுதான் தேசியம், தேசிய கொடி எல்லாம் என்பார்களா? என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார்.