ஹிஜாப் தீர்ப்பு எதிரொலி..நாளை கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்..!
ஹிஜாப் அணிவதற்கு தடை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் நாளை போராட்டம் நடத்தப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் பியு கல்லுாரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு சில இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகம் தடை விதித்தது.

எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இந்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, கிருஷ்ணா தீட்சித்,ஜெ.எம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் விசாரணை முடியும் வரை மத அடையாளங்களோடு வகுப்பிற்கு வர கூடாது என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல எனவே கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்றும் தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மோசமானது என்று மனுதாரர் ஒருவரின் வழக்கறிஞர் ஏ.எம்.தார்,தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர், வழக்கறிஞர் அனஸ் தன்வீர் மூலம் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில்,
ஹிஜாப் அணியும் உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் தனியுரிமைக்கான உரிமையின் வரம்பில் வருகிறது என்பதை உயர் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.