ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை; தேர்வாணையம் புதிய அறிவிப்பு - முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து அரசு போட்டித் தேர்வுகள் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசு பணி தேர்வு
கர்நாடகாவில் கடந்த 6ம் தேதி அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் தலைப்பாகை, ஹிஜாப், தாலி உள்ளிட்டவை அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
அந்தவகையில் மைசூருவில் பெண் தேர்வாளர்கள் தேர்வு அறைக்குள் செல்லும்போது, தாலியைக் கழற்றச் சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் அரசு தேர்வுகள் நடைபெற உள்ளது.
ஹிஜாபுக்கு தடை
இந்நிலையில் , கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய விதிமுறை அறிவித்துள்ளது. அதில் "இனி தேர்வு மையங்களில் தலைப்பாகை, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை.
தேர்வில் ஒழுங்கீன நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தாலி, கழுத்து சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.