ஹிஜாப் வழக்கு : கூடுதல் அமர்விற்கு மாற்றி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி அங்கும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான விசாரணை நேற்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம்,
"நாங்கள் பகுத்தறிவின்படியும் சட்டத்தின்படியும் தான் செல்வோம், உணர்ச்சிகளால் அல்ல. அரசியலமைப்பின்படி தான் நாங்கள் செயல்படுவோம். அரசியலமைப்பு தான் எங்களுக்கு பகவத் கீதை" என தெரிவித்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத்,
“ஹிஜாப் அணிவது இஸ்லாமியத்தில் பின்படுத்தப்படும் முக்கிய நடைமுறையாகும். நான் ஒரு பிராமணன், என் மகன் பள்ளிக்கு நாமம் இட்டு செல்கிறான். இந்த செயல் பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் சொல்ல முடியுமா?
அதே போல்தான் மனுதாரர்கள் ஹிஜாப் அணிந்து யாருக்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் மதச்சார்பின்மையை நாம் இங்கு பின்பற்றுவதில்லை.
அங்கு மத நடவடிக்கைகளில் இருந்து அரசு முற்றிலும் விலகி நிற்கிறது. ஆனால் இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது வேறு. நாம் நேர்மறை மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறோம்.
இங்கு நாம் மாணவர்களுக்கு நாமம், ஹிஜாப் அல்லது சிலுவை அணிய அனுமதிக்கிறோம்.” போன்ற முக்கிய வாதங்களை முன் வைத்து வாதிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரனை இன்று பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் வழக்கு விசாரனைக்கு வந்து இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது.
மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கிரிஷ்ண தீக்சித் கொண்ட அமர்வு ஹிஜாப் தடை விவகாரத்தை கூடுதல் அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும், பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்ல அனுமதிக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க தனி நீதிபதி கொண்ட அமர்வு மறுத்ததோடு, இடைக்கால நிவாரணத்தை கூடுதல் அமர்வு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியது.