ஹிஜாப் விவகாரம் - ‘இது எங்கள் வீடு.. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்காதீங்க...’ - பாகிஸ்தானுக்கு ஒவைசி எச்சரிக்கை

Asaduddin Owaisi ஹிஜாப் Hijab affair Warning to Pakistan ஒவைசி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
By Nandhini Feb 10, 2022 08:29 AM GMT
Report

'ஹிஜாப் விவகாரம் எங்கள் வீட்டுப் பிரச்சினை. இதில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி அங்கும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பர்தா அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய முற்பட்டப்போது அந்த மாணவியை முற்றுகையிட்டு சக மாணவர்கள் பின்தொடர்ந்து போய் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர்.

அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாக போராடிய மாணவி பதிலுக்கு ‘அல்லாஹு அக்பர்’ என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்.

அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரல் ஆனது.

இந்த சம்பவத்திற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது -

"நாளுக்கு நாள் வெறுப்பு அரசியல் இந்தியாவில் எப்படி வலுவடைந்து வருகிறது என்பதையே இந்த ஹிஜாப் விவகாரம் தெளிவாக காட்டுகிறது. வெறுப்பு அரசியல் கூறுகளை ஆளும் பாஜக ஊக்கப்படுத்துகிறது.

இந்தச் சண்டையை ஹிஜாப் அல்லது இஸ்லாமியர்களுடன் இணைக்க வேண்டாம். பள்ளி மாணவிகள் தங்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியும் உரிமையை மறுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றை சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள், அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்சினை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை பாருங்கள். இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க முயல வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார். 

ஹிஜாப் விவகாரம் - ‘இது எங்கள் வீடு.. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்காதீங்க...’ - பாகிஸ்தானுக்கு ஒவைசி எச்சரிக்கை | Hijab Affair Asaduddin Owaisi Warning To Pakistan