சமஸ்கிருதச் செய்தி பிடிக்காவிட்டால் வேறு சேனலை மாற்றிக்கொள்ளுங்கள்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி பிடிக்காவிட்டால் அந்த நேரத்தில் வேறு சேனலை மாற்றிக்கொள்ளுங்கள் எனத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 803 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகினறனர். சமஸ்கிருதத்தை விட பழமையான தமிழ் மொழிக்குப் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. அதே சமயம், பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என மனுவில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சமஸ்கிருதச் செய்தி அறிக்கை தேவையில்லை என்றால் மனுதாரர் அந்த நேரத்தில் தொலைக்காட்சியை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம்.
இதைவிடப் பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கலாம்'' என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டனர்.