அடுத்த சர்ச்சையில் குருமூர்த்தி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி மனு தாக்கல்

world court murthy
By Jon Jan 18, 2021 06:48 PM GMT
Report

சென்னையில் கடந்த 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலர், அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி யார் மூலமாகவோ யார் காலையோ பிடித்து தான் பல நீதிபதிகள் பதவிபெற்றதாகவும் தெரிவித்திருந்தார். குருமூர்த்தியின் பேச்சானது நீதித்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில், வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் முறையீடு செய்திருந்தார்.

அதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் பேச்சு தொடர்பாக நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் மனு தொடர்பாக விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் இது தொடர்பாக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுபோன்று நீதித்துறை குறித்தும், நீதிபதிகள் குறித்தும் பல்வேறு அவதூறான கருத்துக்களை தற்போது குருமூர்த்தி பேசியுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் அடிப்படையில் அவர்மீது நீதிமன்றமே தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்த மனுவானது வருகின்ற புதன்கிழமை விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.