காபூலில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்!! அமெரிக்கா- பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை
காபூல் விமான நிலையத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால், தங்கள் நாட்டு மக்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்கா உட்பட பிரித்தானியா, ஆஸ்திரேலியா நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அந்நாட்டு மக்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றன.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினரால் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே விமானநிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமானநிலையத்திற்குச் செல்ல வேண்டாம்.
ஒருவேளை நீங்கள் அந்தப் பகுதியில் இருந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள். அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடங்களில் இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.