இராணி கொள்ளையர் சென்னையில் என்கவுண்டர் - மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னையில் இராணி கொள்ளையர் என்கவுண்டர் செய்யப்பட்டதையடுத்து, மும்பை தானே பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் செயின் பறிப்பு
சென்னையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து மூதாட்டிகளை குறிவைத்து நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உடனடியாக 4 தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கொள்ளையன் என்கவுண்டர்
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளின் அடையாளங்களை கண்டறிந்து, அதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஓங்கோல் நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கொள்ளையர், ஆந்திர மாநிலம் ஓங்கோலில் கைது செய்யப்பட்டார்.
இதில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்பட்ட ஜாஃபர், தரமணி பகுதியில் நகைகளை மறைத்து வைத்திருப்பதாக கூறியதையடுத்து, காவல்துறையினர் நகைகளை பறிமுதல் செய்ய தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்து சென்றனர்.
தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றபோது, தப்பிப்பதற்காக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வைத்து காவல்துறையினரை, ஜாஃபர் சுட முயன்றான்.
அதை எதிர்பாராத காவல்துறையினர், தற்காப்புக்காக சுட்டதில், மார்பில் குண்டு பாய்ந்து கொள்ளை குற்றவாளி ஜாஃபர் உயிரிழந்தான்.
தானேவில் பலத்த பாதுகாப்பு
இவர்கள் மும்பையை மையமாக வைத்து செயல்படும் இரானி கொள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் ஈரான் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் அந்த பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.
மும்பை தானே அருகே உள்ள கல்யாண் அம்பிவாலி பகுதியில் உள்ள இரானி பாஸ்டி பகுதியில் வசித்து வருகிறார்கள். இரானி கும்பலை சேர்ந்த கொள்ளையர்களின் தளமாக இந்த பகுதி கருதப்படுகிறது.
இந்த பகுதிக்கு குற்றவாளியை பிடிக்க வரும் பல காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜாஃபர் கொல்லப்பட்டதையடுத்து, இந்த பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.