பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை; அறிவிப்பு பதாகையை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
பழனி முருகன் கோவிலில் அறிவிப்பு பதாகையை மீண்டு வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவிப்பு பதாகை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் "இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த பதாகை அகற்றப்பட்டது. இதையடுத்து செந்தில் குமார் என்பர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் "பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்புப் பலகையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நுழைவு விதி சட்டம், இந்து அல்லாத எந்த சமயத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என சட்டத்தில் உள்ளது என்று மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
மேலும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் மாற்று மதத்தை நம்புகிறவர்களும் கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த சட்டம் சொல்வதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, அந்த பதாகை ஏன் அகற்றப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார். இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஸ்ரீமதி.