மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை : இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 17 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை ஒன்றரை மாதத்திற்கு பின் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்திய நிலையில், இம்முறை 15 நாட்களுக்கு முன்பாகவே மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900 ரூபாய் 50 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகி வரும் சூழலில், சிலிண்டர் விலை உயர்த்தப் பட்டிருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையும் 75 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சிலிண்டரின் விலை ஆயிரத்து 831 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை விலை ரூ.285 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.