பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிடுவீர்கள்? இபிஎஸ் தரப்பிற்கு நீதிமன்றம் கேள்வி?
கட்சியின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் சூழலில் எவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதில் முதன்மையாக இருப்பது கட்சியின் பொதுச்செயலாளர் விஷயமே. சசிகலா இருந்து அவர் சிறைக்கு சென்ற பிறகு, கட்சியை முழுவதுமாக கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளருகினார்.
ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டதில் இருந்து அவர் தொடர்ந்து வழக்குகளை தாக்கல் செய்து வருகிறார்.
கேள்வி
கடந்த 2022-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்தார்கள்.
அப்போது பதில் மனு தாக்கல் செய்யும் நேரத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக தாக்கல் செய்தார் இபிஎஸ். ஆனால், தற்போது பதில் மனு தாக்கல் செய்யும் போது, அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதனை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் எவ்வாறு பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனுதாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து மன்னிப்பு கோரப்பட்டிருக்கிறது. இதனை ஏற்று கொண்டு திருத்தும் செய்த மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.